சென்னை,
தொழில் நகரான கோவையில் இருந்து வெட்கி ரைண்டர், மோட்டார் பம்ப், ஜவுளிகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுக ளான ஷார்ஜா, குவைத், சவுதி அரேபியா உள் ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிக்கான கப்பல்கள் வளைகுடா நாடுகள் வழியாக செல்கிறது.
தற்போது ஈரான் நாட்டுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் குண்டு வீசி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் மீதும் குண்டு வீசப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக பல விமான நிலையங்களில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்தும் முடங்கி உள்ளது.
ஜவுளி ஏற்றுமதி குறித்து சைமா அமைப்பு செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:-
போர் சூழ்நிலையால் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. வெளிநாடுகளுக்கு 37 பில்லியன் டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்று மதி செய்யப்படுகிறது. இப்போதுதான் அமெரிக்காவுக்கான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில் நிம்மதி அடைந்து இருந்தோம். அதற்குள் போரினால் ஏற்றுமதி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பாலிஸ்டர் விலை உயரும். இதன் மூலம் ஜவுளி தொழில் மேலும் பாதிக்கும். கப்பல் போக்குவரத்து பாதித்தால். போதிய அளவு கன்டெய்னர்களும் கிடைக்காது. இதனாலும் ஏற்றுமதி பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பொன்மணி வெட்கிரைண்டர் உரிமையாளர் பி.குமரேசன் கூறியதாவது:-
வணிகரீதியாக தயார் செய்யப்படும் வெட்கிரைண்டர்கள் 20 சதவீதம் அளவுக்கு வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த போரினால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. டேபிள் டாப் கிரைண் டர்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான முக்கிய மூலப்பொருட்களின் விலை உயரும். இதன் விலை 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.
தாமிரவிலையும் ஏற்கனவே 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தநிலையில் போர் சூழல் மேலும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற சிரமமான சூழ்நிலையில் வெட்கிரைண்டர் தயாரிப்புக்கான ஜி.எஸ்.டி.யை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய, மாநில அரசுகள் குறைத்தால் நிலைமையை சமாளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.