செய்திகள்

தென்பெண்ணையாறு விவகாரம்: தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தென்பெண்ணையாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்ததாக தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் தென்பெண்ணை ஆற்றில் தமிழகத்திற்கான உரிமையை கர்நாடகாவிற்கு விட்டுக் கொடுத்த தமிழக அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட துணை செயலாளர் பி.முருகன் எம்.எல்.ஏ., ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா எம்.எல்.ஏ. முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. போராடும்

கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு பெங்களூரு வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஜீவாதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் அணை கட்டியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை தமிழக அரசு முறையாக கையாளாத காரணத்தால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தமிழக உரிமையை பாதிக்கும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் வரையில் தி.மு.க. போராடும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், பொன்.குணசேகரன், தம்பிதுரை, மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், பரிதா நவாப், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.