நெகமம்,
கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீர்வடிவப் பகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில் வேளாண்மைக் கருவிகள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா வடசித்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குனர் சித்ராதேவி, பள்ளிக்கல்விகுழு தலைவர் அப்துல் ஜப்பார், ஊராட்சி கழக செயலாளர் மோகன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தேவராஜ், கல்விக்குழு துணைத் தலைவர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் ஞானமுருகன் வரவேற்றார். விழாவிற்கு தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண்மைத்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வேளாண்மைக்கு பயன்படுத்தும் முறையினை செயல்படுத்திட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி உதவியுடன் மாநில நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்ட முகமையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவை மாவட்ட நீர்வடிப்பகுதி முகமையின் கீழ் நில மேம்பாட்டுப் பணிகள், பண்ணை உற்பத்தி மேம்பாட்டுப் பணிகள், மற்றும் நீர்வடிப்பகுதியின் வாழ்வாதார மேம்பாட்டுப்பணிகள் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவுசுல்தான்பேட்டை மற்றும் மதுக்கரை வட்டாரங்களில் இத்திட்டப்பணிகள் 2017 18 ம் நிதியாண்டில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன.இந்த விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீர்வடிப்பகுதிகளான வடசித்தூர், மெட்டுவாவி, மன்றாம்பாளையம், அரசம்பாளையம், கோடங்கிபாளையம், குரு நெல்லிபாளையம், ஆண்டிபாளையம், சிறுக்களந்தை, சோழனூர் ஆகிய பகுதி விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு விவசாயக் கருவிகளான விசைத்தெளிப்பான்கள், தட்டு வெட்டும் கருவி, தார்ப்பாய்கள், தையல் எந்திரங்கள் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக இந்த அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. இந்த பகுதி விவசாயிகள் பயன் அடைய திருமூர்த்தி அணையில் தண்ணீர் நிரம்பியதும் கோதவாடி குளத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்து விடமுயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.முத்துகருப்பணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மந்திரவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முரளிமோகன் தம்பி, முன்னாள் ஒன்றியகுழு துணைத்தலைவர் ஏகநாதமூர்த்தி, டி.எல்.சிங், விநாயகமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.