சிக்கமகளூரு,
பல்லவராயன்துர்கா மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து தங்குவதை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சார்மடி மலைப்பாதையில் உள்ள கொட்டிகேகாரா அருகே பல்லவராயன்துர்கா என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதி சிக்கமகளூரு-தட்சிண கன்னடா மாவட்டத்தை இணைக்கும் முக்கியமான இடமாக உள்ளது.
இந்த மலைப்பகுதிக்கு மங்களூருவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சியும் மேற்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பல்லவராயன்துர்கா மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அங்கு கூடாரம் அமைத்து தங்குவதாகவும், மேலும் அதிக சத்தத்துடன் பாடலை இசைத்து வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும், இதனை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார்கள் எழுந்து உள்ளது.
இதுபற்றி பல்லவராயன்துர்கா மலை அடிவாரத்தில் வசித்து வரும் சுங்கசாலை பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லவராயன்துர்கா மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சட்டவிரோதமாக கூடாரம் அமைத்து தங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படி கூடாரம் அமைத்து தங்கும் சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு அதிக தொந்தரவு ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை அப்படியே போட்டு விட்டு செல்வதால் அங்கு சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது.
இதனால் பல்லவராயன்துர்கா மலையில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து தங்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.``