சென்னை
சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஏறக்குறைய 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதே பகுதியில் உருவாக வாய்ப்புள்ளது.
இதேபோன்று, ஏறக்குறைய 3.1 கி.மீ. உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு கடலோர ஆந்திரா பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.