வானிலை செய்திகள்

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடக்கத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT