வானிலை செய்திகள்

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வடகிழக்கு பருவமழையாவது தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமாக பொழியுமா என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஜனவரி 2 ஆம் வாரம் வரை நீடித்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நல்ல மழையை கொடுத்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 43 செமீ மழை பதிவானது. எல் நினோ பாதிப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.16 முதல் 18 வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT