வானிலை செய்திகள்

22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு?

தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.