சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், எண்ணூர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.