வானிலை செய்திகள்

சென்னையில் மேகவெடிப்பு? - வெளுத்து வாங்கும் கனமழை

வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

வளிமண்டல சுழற்சி

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனமழை

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

மேகவெடிப்பு

குறிப்பாக சென்னையில் அதிகமழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மேலும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் கத்திவாக்கத்தில் 26 செ.மீ., பாரிமுனை 25.5 செமீ, திருவெற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ, எண்ணூர் 9 செ.மீ, மணலி 9 செ.மீ, மாதாவரம் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தற்போது மேகங்கள் தென்சென்னையை நோக்கியும் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

SCROLL FOR NEXT