சென்னை,
கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என 7 மாவட்டங்களில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முரசு புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் 3 நாட்களுக்கு கீழ்கானும் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
01.11.2026 (இன்று): திருவள்ளூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
02.11.2026 (நாளை): சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.11.2026: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே, பேரிடர் காலங்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.