வானிலை செய்திகள்

சென்னையில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் இன்று அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதனால் பொதுமக்கள் நீர்ச்சத்துமிக்க பாணங்களை, உடலுக்கு குளிர்ச்சி தரும் பாணங்களையும் அதிகம் பருகவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 108 டிகிரியை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தவாறு செல்வதை காணமுடிகிறது. பலரது வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையே வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து பலரும் வீடுகளிலேயே முடங்குகின்றனர்.