வானிலை செய்திகள்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னையின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை லட்சத்தீவு, வடக்கு கேரளம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் ஆந்திரா வழியாக ஒரு வளிமண்டல காற்ற ழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று தமிழகம், புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி வரையிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.