கோவை
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 60.20 மி.மீ. மழை பதிவானது.
• திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.
• ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.
• கோவையில் கனமழை பெய்து சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
• நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். எனினும், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேனி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
• கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்தில் 4 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, சின்னசேலம், பொரசக்குறிச்சி, விருகாவூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
• நாகையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
• புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.