சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அடுத்த 2 நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது, அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.
சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கிமீ உயரம் வரை தெற்கு ஸ்ரீலங்கா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று(14.10.2026) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அதே போல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கல்லக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-10-2026 முதல் 15-10-2026 வரை: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.