சென்னை,
நேற்று முன்தினம் (20-02-2026) பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, நேற்று (21-02-2026) காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவானது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இன்று வலுப்பெற உள்ளது.
இதன்காரணமாக இன்று (22-02-2026) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் - இந்தியப் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு - வடமேற்கு திசையிலும், பின்னர் வடகிழக்கு திசையிலும் நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று (22-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.