சென்னை,
தென்தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 15-ந்தேதி முதல் மழை பெய்து வரும் சூழலில், வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை புதிய குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அக். 24-ல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக். 25-ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, அக். 26-க்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அக்.26ம் தேதி உருவாக உள்ள புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’ (கடல்) என்ற பெயர் சூட்டப்படவுள்ளது
இதனிடையே தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர். திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி. திருநெல்வேலி, அரியலூர். கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (சனிக்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி. கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும், ஏனைய தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.