வானிலை செய்திகள்

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

குறுகிய நேரத்தில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும், 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகா மற்றும் கேரளப்பகுதிகளில் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இயல்பான அளவில்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 21 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு 45 சதவீதமும், 2012-ல் 23 சதவீதமும், 2016-ல் 20 சதவீதமும் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்கியிருக்கிறது. நடப்பாண்டில் இந்த பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதி கனமழை

இதில் வட மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பையொட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது. வானிலையை முன்கூட்டி துல்லியமாக கணிக்க முடியாது. இந்த நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் காலநிலையை முன்கூட்டி கணிக்க முடியும்.

அந்த வகையில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் அதிக மழை பெய்யும், மழை கொட்டும் என்று சொல்வது வானிலையில் அறிவியல்பூர்வமான முன்னறிவிப்பில் வாய்ப்பு இல்லை. அது கஷ்டம். குறுகிய நேரத்தில் அதி கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கடலோர பகுதிகளில் நல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கனமழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கிய நிலையில், வருகிற 19-ந்தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மழை

நாளை (சனிக்கிழமை ) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழையும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தோகைமலை (கரூர்), திருவெண்காடு (மயிலாடுதுறை) தலா 11 செ.மீ., பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), நாகப்பட்டினம், தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மருதம்பள்ளம் (மயிலாடுதுறை) ஏழுப்பட்டி (திருச்சி) தலா 9 செ.மீ., தங்கச்சிமடம் (ராமநாதபுரம்). தம்மம்பட்டி (சேலம்), நெடும்புலி (ராணிப்பேட்டை) தலா 8 செ.மீ. உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

SCROLL FOR NEXT