காற்றழுத்த தாழ்வுப் பகுதி 
வானிலை செய்திகள்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; எங்கெல்லாம் மழை பெய்யும்?

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் இன்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த சூழலில்,தற்போது அந்தமான் கடல் பகுதியில் மேற்கு திசை காற்றின் காரணமாக ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்” என்றுதெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் கூறுகையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நிச்சயம் வலுப்பெறும் என்றும், தற்போது கரையை கடந்த புயலின் தன்மை முழுவதுமாக நீங்கிய பிறகே தற்போது புதிதாக உருவாக இருக்கும் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையுமா?, தீபாவளி பண்டிகை வரை இந்த மழை தொடருமா? என்பது குறித்து தெரியவரும்”என்றார். இந்த தாழ்வுப் பகுதி காரணமாக, பெரும்பாலும் வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழையை கொடுக்கும் என்றே இப்போது கணிக்கப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT