வானிலை செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை,

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையில் 29 முதல் 30 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.