சென்னை,
சென்னையில் மாலையில் தீவிரமாகும் மழை இரவு முழுவதும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக எல்-நினோ தாக்க ஆய்வுக் குழு ஊறுப்பினர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து எல்-நினோ தாக்க ஆய்வுக் குழு ஊறுப்பினர் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் பதிவில்,
”விடுமுறை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்கு மழையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படுகிறது. வட சென்னையில் தற்போது தொடங்கியுள்ள நல்ல மழைப்பொழிவானது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்.
சென்னையில் இன்று(அக்.20) பகலில் விட்டு விட்டு திடீரென மழை பெய்யக் கூடும். சென்னையில் மாலையில் தீவிரமாகும் மழை இரவு முழுவதும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை (அக்.21) அதிகாலை வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் திடீர் மழையாக குறுகிய நேரத்திற்குத் தீவிரமாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவெளியில் வெய்யில் காணப்படும். மாலையிலிருந்து இரவு வரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலை வரை தொடர வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவரமடையும்” எனத் தெரிவித்துள்ளார்.