சென்னை,
தொடர்ச்சியான புயல்கள் மற்றும் பெருவெள்ளத்தால் உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) குறித்தும், அதனால் உலக நாடுகளும் இந்தியாவும் 2026,2027 ஆகிய ஆண்டுகளில் வரலாறு காணாத இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
எல் நினோ என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும். பசிபிக் பெருங்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கடல் பரப்பின் சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிப்பதை 'எல் நினோ' என்றும், அந்த வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாக இருந்தால் 'லா நினா' என்றும் அழைக்கப்படுகிறது.
கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் உயர்வைப் பொறுத்து இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சராசரி வெப்பநிலையை விட 0.6 முதல் 0.8 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே உயர்ந்தால் சாதாரண எல் நினோ என குறிப்பிடப்படுகிறது. வெப்பநிலை 1.2 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தால் தீவிர எல் நினோ (Strong El Niño) என்றும் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கும் மேல் உயர்ந்தால் அதிதீவிர எல் நினோ (Super ElNino) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இது 2.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எல்.நினோ குறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
இந்த நவம்பருக்குள் எல் நினோ, இதுவரை இல்லாத சூப்பர் எல் நினோ சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
சூப்பர் எல் நினோ 2026: "இன்றைய பெருங்கடல் பாதிப்புகள், நாளைய நமது நிலப்பரப்பில்"
* ஜூன் மத்தியில் உருவான எல் நினோ, வளிமண்டலத்திலும் பிரதிபலிக்க துவங்கியது
* செப்டம்பர் இறுதி, அக்டோபரில் சூப்பர் எல் நினோ ஆக உருவெடுத்து, வரும் நவம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமான சூப்பர் எல் நினோவாக வலுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
* இதனால் 2026, 2027 ஆகிய ஆண்டுகளில் உலகில் வரலாறு காணாத இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
* பூமி தீவிரமான காலநிலை நெருக்கடி சவால்களின் சகாப்தத்தில் நுழைந்துள்ளது, மேலும் 2026-ல் ஒரு சக்திவாய்ந்த சூப்பர் எல் நினோ ஏற்படுவதற்கான சாத்தியம் இப்போது அதிகரித்து வருகிறது.
* வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் ஏற்கனவே உருவாகியுள்ளன, மேலும் பெருங்கடல் மற்றும் வளிமண்டல இணைப்பு நிகழ்ந்து வருகிறது.
* வரும் வாரங்களில் இது மேலும் வலுப்பெறும் என்றும், செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபர் 2026 தொடக்கத்தில் சூப்பர் எல் நினோ அதன் நிலையை அடையக்கூடும் என்றும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
* நவம்பர் மாதத்திற்குள், இந்த நிகழ்வு தீவிரமாக உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது,
* ஏப்ரல் மாதத்தில் வீசிய மேற்குக் காற்று காரணமாக பெரு மற்றும் ஈக்வடார் கடற்பரப்பில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை +4°சி-ஐத் தாண்டியுள்ளது - இது வலுவான எல் நினோ நிகழ்வுகளுக்குரிய பெரிய அளவிலான வெப்ப நீர் குவிப்பின் தெளிவான அறிகுறியாகும்.
* பசிபிக் பெருங்கடலில் வரவிருக்கும் மேற்குக் காற்று, வரும் வாரங்களில் இந்தத் தீவிரமடைதலை மேலும் வேகப்படுத்தும்.
* இதற்கு முன் 1876-ஆம் ஆண்டு 1.8 டிகிரி அளவுக்கு உயர்ந்த சூப்பர் எல் நினோ நிகழ்வின் போது தான் உலகத்தை உலுக்கிய தாது வருடப் பஞ்சம் ஏற்பட்டது.
ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் ஏற்கனவே ஆரம்பகட்ட விளைவுகளை சந்தித்து வருகின்றன, ஆனால் இவை ஒரு ஆரம்பம் மட்டுமே. மிகவும் வலுவான எல் நினோ என்பது உலகளாவிய வானிலை முறைகளை கணிசமாக மாற்றக்கூடும். இது சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற தீவிர நிகழ்வுகளின் அபாயத்தையும், மற்ற பகுதிகளில் கடுமையான வறட்சி, வெப்பக் குவிமாடம், வெப்ப அலைகள் போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
இந்தியா போன்ற ஆசிய நாடுகள் கூட பருவமழையால் சிரமப்பட்டு, இயல்பை விட அதிகமான வெப்பநிலையை அனுபவித்து வருகின்றன.
இது அச்சமூட்டுவதற்கான அழைப்பு அல்ல, மாறாக சரியான நேரத்தில் தயாராவதற்கான ஒரு வலுவான பரிந்துரை. அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்கள் பின்வரும் முக்கியத் துறைகளில் திட்டமிடலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்:
1. வேளாண்மை - நடவு அட்டவணைகளைச் சரிசெய்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நடைமுறைகளை உறுதிசெய்ய வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் போதுமான நீர் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. நீர் வளங்கள் - நீர்த்தேக்கங்களையும் வறட்சி/வெள்ளப் பேரிடர் சூழல்களையும் நிர்வகிக்க வேண்டும். பருவமழைக்கு முன் கடல்நீரைக் குடிநீராக்குதல் மற்றும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை மேம்படுத்துதல் வேண்டும்
3. பேரிடர் மேலாண்மை - வடகிழக்குப் பருவமழைக்கு முன், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளையும் உள்கட்டமைப்பு மீள்திறனையும் வலுப்படுத்த வேண்டும்.
4. குடிநீர் திட்டம் - 2027-ஆம் ஆண்டுக்குள் குடிநீர் நெருக்கடியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
5. சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் - குறிப்பாக 2027 மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், வெப்பம் தொடர்பான பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் அழுத்தங்களுக்குத் தயாராக வேண்டும்.
5. மின்சாரம் - அடுத்த 1 ஆண்டு காலத்தில் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தடைகளை முன்கூட்டியே கணிக்க வேண்டும்.
6. நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சி - வர்த்தகம், உணவுப் பொருட்களின் விலை மற்றும் சந்தைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஈடுகட்ட நிதி ஆதாரங்களை சரி செய்ய வேண்டும்.
என அதில் பதிவிட்டுள்ளார்.