வானிலை செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில, மாவட்ட அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மே மாதம் மூன்றாவது வாரத் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு இயல்பைவிட குறைவாக பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழை காலத்தில் சராசரியை விட குறைந்து 90% மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 6% குறைவாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பாக இருக்கும் எனவும் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அரியானா, பஞ்சாப், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா, மராட்டியம், தெலங்கானா, இமாச்சல், தமிழ்நாட்டில் இயல்பை விட அதிக நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைவான மழைப்பொழிவு, அதிக வெப்பத்தால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள், மின்தேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில, மாவட்ட அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.