சென்னை,
காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா-மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்றுள்ளது. வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா-மேற்கு வங்க கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவின் பாலசோருக்கு 50 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், மேற்கு வங்கம் டிக்காவுக்கு 60 கி.மீ. தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா -வடக்கு சத்தீஸ்கர் வழியே நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.