சென்னை,
வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயல் சின்னம் தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி துரை கூறியுள்ளார்.
தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது. மேலும் 15-ந்தேதி அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறும்போது,
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகி அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி வர வாய்ப்பு இல்லை. அதற்கான சாத்தியக்கூறு குறைவாக காணப்படுகிறது.
இருப்பினும் நாளை தாழ்வு பகுதி உருவான பிறகு தான் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி கூற முடியும். தற்போது நிலவரப்படி தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தென் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.