சென்னை,
கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாக உள்ளதால் அதிக புயல்கள் உருவாகின்றன என சென்னை வானிலை மைய இயக்குநர் துரை கூறியுள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குநர் துரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அந்தமான் கடல் & அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மத்திய வங்கக்கடல் பகுதியில் வரும் 16ம் தேதி மாலை அக்வான் என்ற ‘அரக்கன்' புயல் உருவாகிறது.
தென் கிழக்கு வங்கக் கடலில் வடமேற்காக நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. இடையிடையே 60 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும்.
புயல் உருவாகும் இடத்தை வைத்து நகரும் திசையை கணிக்க முடியாது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல், வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசாவை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது. கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாக உள்ளதால் அதிக புயல்கள் உருவாகின்றன.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸூம் இருக்கக்கூடும்.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். "அந்தமான் கடல் பகுதி, தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்"
சூறாவளிக்காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நவ. 19 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ. 17, 18ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.