சென்னை
தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதம் மற்றும் ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் மழைப்பொழிவு. வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டின் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாகவும், வடக்கு உள், தெற்கு உள் மாவட்டங்களில் இயல்பு நிலையிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்யக்கூடும்.
மேலும் இந்த மாதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து சற்று அதிகமாக இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு முதல் இயல்புக்கு மேல் பதிவாகக் கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்ததாழ்வு பாதை நிலவுவதால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.