சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நாளான நேற்றும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கி மீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை, தென் தமிழகம், தெற்கு கேரளா மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக
இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
10-11-2026: தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.