சென்னை,
வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா & மாஹே ஆகிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.
சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.