வானிலை செய்திகள்

தென்காசி, குமரியில் பரவலாக மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தென்காசி, குமரியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி

வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள். தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குமரி மாவட்டத்தின் பல்வேறு பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதேபோல தென்காசி மாவட்டம் குற்றாலம், வல்லம், செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், தற்போது பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.