வானிலை செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பா..? - வானிலை மையம் வெளியிட்ட ‘அப்டேட்’

தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்த நிலையில், நாளை புயலாகவும் வலுப்பெறுகிறது.

புயல் உருவாகிறது

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக நாளை (திங்கட்கிழமை) உருவாகிறது.

இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28-ஆம் தேதி இது ’அதிதீவிர புயலாக’ ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் அதிகனமழை

இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்த பகுதிகளுக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை,நாமக்கல். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் (மஞ்சள் அலர்ட்), தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம். திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கனமழை பெய்யும் இடங்கள்

நாளை (திங்கள் கிழமை) சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் காற்றுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT