உலக செய்திகள்

எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் பலி

இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை.

கின்ஷாசா

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், பொது சுகாதார மந்திரி சாமுவேல் ரோஜர் கம்பா இன்று கூறும்போது, எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 131 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இதுதவிர, 513 பேருக்கு சந்தேகத்திற்குரிய வகையிலான தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். இந்த மரணம் சந்தேக அடிப்படையிலானவை. இருப்பினும், இந்த வியாதிக்கு உண்மையில் என்ன காரணம்? என்பது பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார்.

இது உலகிலேயே மிக கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது உடலின் உட்புற உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்த கூடும். காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா, தெற்கு சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆன்டனியோ டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது என்றார். இதற்கு காரணம் பண்டிபக்யோ என்ற வைரஸ் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரசுக்கு நோய் தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ எதுவும் இல்லை. தொடர்ந்து காங்கோவில் மருத்துவ பரிசோதனைகளும் நடந்து வருகின்றன.