உலக செய்திகள்

உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்

உலகில் காற்றுமாசு அதிகம் கொண்ட 20 நகரங்கள் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. #AirPollution

புதுடெல்லி,

உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள 20 நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பான (WHO) உலக அளவில் காற்றுமாசு அதிகம் பதிவாகும் நகரங்களை கடந்த 2016-ம் ஆண்டு முதல் கண்காணித்து வருகிறது. இதில் இந்தியாவில் லக்னோ, பரிதாபாத், வாரணாசி, கயா, பாட்னா, டெல்லி, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜோத்பூர், பாட்டியாலா, உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் காற்றுமாசால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய நகரங்களில் காற்றில் உள்ள மாசு பி.எ 2.5 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், குவைத்தில் உள்ள அலி சுபா அல்-சலீம், மற்றும் சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ள சில நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலகில் வசிக்கும் 10 பேரில் 9 பேர் அதிக அளவு மாசு கொண்ட காற்றை சுவாசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. பி.எம் 2.5-ல் சல்பேட், நைட்ரேட், பிளாக் கார்பன் ஆகியவை அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மனித உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியதாகும்.