காசா நகரம்
காசாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியான நிலையில், 18 முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக 2023-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஹமாஸ் அமைப்பின் கொடூர தாக்குதலை தொடர்ந்து, காசாவுக்கு எதிரான தீவிர போரில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதில், பாலஸ்தீனியர்கள் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு தப்பி செல்கின்றனர்.
இந்த நிலையில், காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவ வளாகம் மீது இஸ்ரேல், வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், ஒரு குழந்தை மற்றும் மருத்துவர் ஒருவர் உள்பட 6 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். இதில், பலர் காயமடைந்தனர்.
இதில், பாதிக்கப்பட்டவர்களில் பலர் நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆவர் என தகவல் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்திற்கு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 18 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுதொடர்பாக கூட்டாக கண்டன அறிக்கையும் வெளியிட்டன. இது, சர்வதேச மனிதாபிமான சட்ட விதிமீறல் என குறிப்பிட்டதுடன், காசாவுக்குள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கும்படியும் வலியுறுத்தி உள்ளன.
எனினும், ஹமாஸ் அமைப்பின் கான் யூனிஸ் பகுதிக்கான தளபதி முகமது அபு இஸ்மாயிலை இலக்காக கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.