கொழும்பு,
இந்தியா-இலங்கை இடையிலான உறவில் மீனவர்கள் விவகாரம் பெரும் சிக்கலான ஒன்றாக தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இலங்கைக் கடற்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 128 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், இந்திய கடற்படையும் இலங்கை மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக அந்நாட்டின் கடற்படை குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் இன்றே தங்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.