ஜகார்த்தா,
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான பசிபிக் "நெருப்பு வளையத்தில்" இந்தோனேசியா அமைந்துள்ளது, இங்கு பல புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலைச் செயல்பாடுகளும் நிகழ்கின்றன. மேலும் மில்லியன் கணக்கான மக்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசியாவின் ஒரு பகுதியை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய் கிழமை) உலுக்கியது, அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.2 ஆக பதிவானது.. தொடர்ந்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மத்திய சுலவேசி மாகாணத்தின் தலைநகரான பாலுவிலிருந்து 46 கிலோமீட்டர் (29 மைல்கள்) கிழக்கு-தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இது சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வு தொடங்கி ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர், இருப்பினும் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்கின்றன என்றும், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அவசரகால குழுக்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.