இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் 
உலக செய்திகள்

“ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள்”.. அமெரிக்காவின் 2 மாநிலங்கள் பிரகடனம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள், ஆகஸ்ட் 15ஆம் நாளை “இந்திய சுதந்திர நாள்” என்று பிரகடனம் செய்துள்ளன. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தையும், ஒரு சுதந்திர நாடாக இந்தியாவின் பயணத்தையும், இந்திய-அமெரிக்க சமூகத்தின் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் 80-வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், நியூ ஜெர்சி ஆளுநர் மிக்கி ஷெரில் வெளியிட்டிருப்பதாக நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவையும், அந்த இரு மாநிலங்களுக்கு இந்திய-அமெரிக்கர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக, இரு மாநில ஆளுநர்களுக்கும் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

நியூயார்க் மற்றும் நியுஜெர்சி ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பல்வேறு துறைகளில் இந்திய வம்சாவளியினர் தங்களது முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இந்த அறிவிப்பானது இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தவும், இதுவரை உள்ள உறவை எடுத்துக்காட்டும் விதமாகவும் அமைந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மூலம் கலாச்சார நிகழ்ச்சிகள், கொடியேற்றும் விழாக்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக, மாசசூசெட்ஸ் ஆளுநர் மவுரா ஹீலி மற்றும் பாஸ்டன் மேயர் மிஷெல் வூ ஆகியோரும் ஆகஸ்ட் 15-ம் தேதியை ‘இந்தியா தினம்’ என அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஆசிய இனக்குழுக்களில் இந்திய வம்சாவளியினர் மூன்றாவது பெரிய குழுவாக உள்ளனர்.

இவ்வாறு இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதை , அமெரிக்காவில் உள்ள பல்வேறு உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் அல்லது புதிதாக அறிவிக்கும் நடவடிக்கை ஆகும்.