தெஹ்ரான்,
ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று தொடங்கின.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலியானார்கள். 86 வயதில் கொல்லப்பட்ட அயதுல்லா காமேனி பல தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் இறுதிச்சடங்கு போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இதுவரை நடைபெறாமல் இருந்துவந்தது. சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் சற்று அமைதி நிலவி வருவதால் அயதுல்லாவின் இறுதிச்சடங்கு திட்டமிடப்பட்டது.
அவர்களது மத வழக்கப்படி பல நாட்கள் நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் தொடங்கியது. அங்குள்ள 'கிராண்ட் மொசல்லா' மசூதி வளாகத்தில் திறந்தவெளி மேடையில் அயதுல்லா அலி காமேனி உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே அவருடன் பலியான அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
காமேனியின் சவப்பெட்டியின் மீது கருப்பு நிறத் தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது, அவர் ஷியா பிரிவின் தலைவர் என்பதால் அவரை நபிகள் நாயகத்தின் நேரடி வாரிசு என்பதை அடையாளப்படுத்தும் விதமாக இந்த தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது.
அயதுல்லாவுக்கு அஞ்சலி செலுத்த நாடு முழுவதும் இருந்து 2 கோடி பேர் கலந்து கொண்டனர். இது இந்த நூற்றாண்டில் ஒரு தலைவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட உலகின் அதிக மக்கள் கலந்து கொண்டது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே போன்று உலகின் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சவப்பெட்டிகளை பார்த்து கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர். அங்கு கூடியிருந்த மக்களில் பலர் "எங்கள் குரல் ஒன்றே பழிவாங்குவோம்... பழிவாங்குவோம்..." என்று முழக்கமிட்டனர். சிலர் “அமெரிக்கா ஒழிக!" என்றும், "இஸ்ரேல் ஒழிக!" என்றும் கோஷமிட்ட னர். சிலர் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தினர் மீது தன்னார்வலர்கள் குளிர்ச்சியான நீரை தெளித்தபடி இருந்தனர். பல இடங்களில் உணவுகள், பானங்கள் வழங்கப்பட்டன
காமேனியின் உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கின் பல்வேறு நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. துக்க நிகழ்வுக்காக அதிகாரிகள் சாலைகள் மற்றும் வான்வெளியை மூடி பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். அன்றாட நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. காமேனியின் பிறந்த இட மான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசாவில் 9-ந்தேதி (வியாழக்கிழமை) உடல் அடக்கம் செய்யப்படுவதோடு அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நிறைவடைகிறது.