உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் - உயிரிழந்ததாக அறிவிக்க முடிவு

வெள்ளத்தில் காணாமல் போனவர்களை உயிரிழந்தோர் என அறிவிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

காத்மாண்டு,

நேபாளம் - திபெத் எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

காணாமல் போனவர்கள்

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 1,453 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்களை உயிரிழந்தோர் என அறிவிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியர்கள்

இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்களின் பெயர்கள் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் குறித்து அறிவிப்பு

காணாமல் போன நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால், அவர்கள் டிசம்பர் 2-ந்தேதிக்கு முன்னர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் eoikathmandufloodsupport@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +9779851316807 என்ற அலைபேசி எண்ணிலோ தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையை முடித்த பிறகு, நேபாள அரசாங்கம் பட்டியலை இறுதி செய்து, நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த இந்தியர்கள் தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT