வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த இருநாடுகள் இடையே, கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு, ஈரான் கப்பல்களை தடுத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பாக்கப்பட்டது. அமெரிக்கா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு செல்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சூழலில், அமெரிக்காவின் தூதர்கள் குழு மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் பயணத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக நிறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எங்கள் குழுவினர் புறப்படுவதற்கு தயாராக இருந்தனர். அவர்களிடம், பேச்சுவார்த்தைக்காக இனி நாம் 18 மணி நேர விமான பயணத்தை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தேன்.
எல்லா அதிகாரமும் எங்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம். ஆனால் இனிமேல் சும்மா உட்கார்ந்து அர்த்தமற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதற்காக 18 மணி நேர விமானப் பயணங்களை மேற்கொள்ளப் போவதில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.