மஸ்கட்,
இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் கப்பல்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஓமன் நாட்டின் மார்ஷல் தீவு அருகே அரபிக்கடலில் நேற்று சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பயணித்தனர். அந்த சரக்கு கப்பலில் வேதிப்பொருட்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.
அதேவேளை, அந்த சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து கப்பலில் பயணித்த மாலுமிகள் உதவிகோரி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஓமன் கடற்படையினர் விரைந்து சென்று 21 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். ஆனாலும், கடலில் விழுந்து மாயமான எஞ்சிய 3 இந்திய மாலுமிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாயமான 3 இந்திய மாலுமிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேவேளை, இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கான இந்திய தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.