வாஷிங்டன்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரங்களை கொண்ட 31 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட முடிவாகி உள்ளது என பியூஷ் கோயல் கூறினார்.
பொருளாதார கொள்கையை பற்றி ஆலோசிப்பது மற்றும் ஒருங்கிணைப்பது தொடர்பாக உலகின் மிகப்பெரிய நவீன மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை ஒன்றாக இணைக்கும் சர்வதேச அமைப்பாக ஜி20 செயல்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி20 தலைமையை அமெரிக்கா ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மில்வாகீ நகரில் ஜி20 வர்த்தக மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் நடந்து வருகிறது.
20 நாடுகளை ஒரு குழுவாக கொண்டு செயல்படும் இதில், சீனா, கனடா, பிரேசில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா சார்பில் வர்த்தக பிரதிநிதியாக பங்கேற்பதற்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல், அந்நாட்டின் சிகாகோ நகருக்கு சென்றுள்ளார். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீர் தலைமையில் நடந்த ஜி20 வர்த்தக மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக நடந்த தேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் வட்டமேஜை வர்த்தக கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது மத்திய மந்திரி கோயல், அமெரிக்க உற்பத்தியாளர்களை இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள வரும்படி அழைப்பு விடுத்து பேசினார். எங்களுடைய நாட்டில் வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்தி, உங்களுடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துங்கள். சிறு மற்றும் நடுத்தர இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.
இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கு மதிப்பு ஏற்படுத்தும் வகையில், வினியோக சங்கிலிகளை உறுதியாக கட்டமைக்க, நவீன தயாரிப்பில் துணை முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு இடையே பிரான்ஸ், கனடா, சவுதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய 4 நாடுகளின் வர்த்தக மந்திரிகளை அவர் தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இதன்பின்னர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய-அமெரிக்க சமூக அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தியர்களும், அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் கோயல் உரையாடினார். அப்போது அவர், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் இருந்து பல துறைகளை சேர்ந்த அதிக அளவிலான வர்த்தக குழுவினரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லும் திட்டம் உள்ளது என்றார்.
இதனை தொடர்ந்து, சிகாகோ நகரில் இன்று நடந்த அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, உலக நாடுகளின் 75 முதல் 80 சதவீத பொருளாதாரங்களை இணைக்கும் வகையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான நெட்வொர்க்கை கட்டமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
சமீப ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தையை விரிவுப்படுத்தி இருக்கிறோம். பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரங்களை கொண்ட நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா செயல்பட்டு வந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரங்களை கொண்ட 31 வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட முடிவாகி உள்ளது.
இதுதவிர, 15 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான பொருளாதாரங்களை உள்ளடக்கிய 6 முதல் 8 பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்றார். இந்த பொருளாதார விரிவாக்கத்தில் பங்கெடுக்கும்படி இந்திய மற்றும் அமெரிக்க தொழில் முனைவர்களிடம் அப்போது அவர் கேட்டு கொண்டார்.