ஷிலோ அட்டூன் 
உலக செய்திகள்

இஸ்ரேலில் 3,300 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்திய தாயம் கண்டெடுப்பு

பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் இந்த வகை வண்டுகள் மறுபிறவி மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டன.

ஜெருசலேம்,

இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் கெஸர் தேசிய பூங்கா பகுதியில், 3,300 ஆண்டுகள் பழமையான பண்டைய எகிப்திய தாயம் (Scarab Amulet) ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது வயது சிறுவன் கண்டறிந்துள்ளான்.

கல்வி சுற்றுலா

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஷிலோ அட்டூன். இவர் கல்வி சுற்றுலாவிற்காக முதன்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு வந்துள்ளார். சுற்றுலா வந்த இரண்டாவது நாளிலேயே, யூதேய மலைக்குன்று பகுதியில் உள்ள டெல் கெஸர் தேசிய பூங்காவில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தரையில் வித்தியாசமான கல் போன்ற பொருள் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்

புனித வண்டு வடிவ தாயம்

அவர் அதை எடுத்து பார்த்தபோது, அது பண்டைய எகிப்தியர்கள் பயன்படுத்திய அரிய தாயம் என்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து அந்த தாயத்தை ஆய்வு செய்தனர்.

எகிப்து சித்திர எழுத்து

அதில், வெண்கல காலத்தின் பிற்பகுதியை சேர்ந்த (சுமார் 3,300 ஆண்டுகள் பழமையான) 'ஸ்கேரப்' எனப்படும் புனித வண்டின் வடிவம் செதுக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த தாயத்தின் அடிப்பகுதியில் இரண்டு நாகப்பாம்புகளின் உருவங்களும், எகிப்திய சித்திர எழுத்து வடிவில் 'அரசர்' அல்லது 'தலைவர்' என்பதை குறிக்கும் குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் இந்த வகை வண்டுகள் மறுபிறவி மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பார்க்கப்பட்டன. கானான் பகுதியில் எகிப்தியர்களின் ஆட்சி மற்றும் வணிக தொடர்பு இருந்ததை இந்த தாயம் உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பாராட்டு சான்றிதழ்

சுற்றுலா வந்த இடத்தில் மிக அரிய வரலாற்றுப் பொருளைக் கண்டறிந்து, அதை நேர்மையுடன் அரசிடம் ஒப்படைத்த அமெரிக்க சிறுவன் ஷிலோ அட்டூனைப் பாராட்டி, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது தொல்பொருள் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT