உலக செய்திகள்

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி

நானிங் நகரில் உள்ள அணை நிரம்பியதுடன், திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

பெய்ஜிங்,

தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் மேல் அதி கனமழை பெய்தது. இதனால் நானிங் நகரில் உள்ள அணை நிரம்பியதுடன், திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

ஒரு அணை உடைந்த சம்பவத்தில் மட்டும் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்ததாக, அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார். பிற வெள்ள பாதிப்புகளிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ட்ரோன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான படகுகளுடன் 8 ஆயிரம் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 1,30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது அப்பகுதி மக்களிடையே கலக்கமடையச் செய்துள்ளது.