பீஜிங்,
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று காலை மட்டும் சீனாவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
திபெத்தில் நேற்று முன்தினம் இரவு 10.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிய அளவிலான பல தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இந்த நிலையில், சீனாவில் இன்று காலை மட்டும் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. அதன்படி, திபெத்தில் இன்று அதிகாலை 1.08 மணியளவில் ரிக்டர் 4.0 அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அதிகாலை 2.07 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, காலை 5.38 மணியளவில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனிடையே, சீனாவில் காலை 4.09 மணியளவில் ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
சீனாவில் இன்று காலை மட்டும் 4 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.