வீடியோ கேம் 
உலக செய்திகள்

41 ஆண்டுகள் பழமையான 'சூப்பர் மரியோ பிரதர்ஸ்' வீடியோ கேம்: ஏலத்தில் ரூ.89 லட்சத்திற்கு விற்பனை!

பொதுவாக சீல் பிரிக்கப்படாத கேம்களே கோடிக்கணக்கில் விற்பனையாகும். ஆனால், இந்த கேமின் பெட்டி திறக்கப்பட்டு உள்ளே இருந்த கேம் விளையாடப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

கடந்த 1985-ம் ஆண்டு வெளியான அரிய வகை 'சூப்பர் மரியோ பிரதர்ஸ்' வீடியோ கேம், அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் $96,875 (சுமார் ரூ.89 லட்சம்) விலைக்குப் போய் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

ஏலத்தில் வரலாற்றுச் சாதனை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் உள்ள பிரபல ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் (Heritage Auctions) ஏல நிறுவனம், கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 'வீடியோ கேம்ஸ் சிக்னேச்சர் ஏலத்தை' நடத்தியது. மொத்தம் $2.51 மில்லியன் மதிப்பிலான அரிய கேம்கள் விற்பனையான இந்த ஏலத்தில், 1985-ம் ஆண்டைச் சேர்ந்த பழமையான 'சூப்பர் மாரியோ' வீடியோ கேம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதாவது 41 ஆண்டுகள் பழமையான இந்த வீடியோ கேம் $96,875 (சுமார் ரூ.89.78 லட்சம்) விலைக்குப் போய் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

2 உலக சாதனைகள்

நிண்டெண்டோ நிறுவனத்தால் கடந்த 1985-ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட 'மேட்-ஸ்டிக்கர்' பதிப்பான இந்த கேமிற்கு PSA 9.0 என்ற உயர்தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் இது 2 முக்கிய உலக சாதனைகளைப் படைத்துள்ளது.

1. 'கம்ப்ளீட்-இன்-பாக்ஸ்' வகையில் அதிக விலைக்கு விற்பனையான வீடியோ கேம்.

2. முதற்கட்ட தயாரிப்பில் வெளியான சூப்பர் மாரியோ பிரதர்ஸ் கேம்களில் அதிக விலைக்குப் போன கேம்.

'கம்ப்ளீட்-இன்-பாக்ஸ்' என்றால் என்ன?

பொதுவாக சீல் பிரிக்கப்படாத கேம்களே கோடிக்கணக்கில் விற்பனையாகும். ஆனால், இந்த கேமின் பெட்டி திறக்கப்பட்டு உள்ளே இருந்த கேம் விளையாடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் அசல் கேட்ரிட்ஜ், கையேடு மற்றும் பெட்டியுடன் வந்த அனைத்துப் பொருட்களும் 41 ஆண்டுகளாக எந்த சேதமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.

சேகரிப்பாளர்களிடையே அதிகரிக்கும் ஆர்வம்

இது குறித்து ஏல நிறுவனத்தின் இயக்குநர் இவான் மாசிங்கில் கூறுகையில், "வீடியோ கேம் வரலாற்றில் சூப்பர் மாரியோ பிரதர்ஸ் கேமிற்கு உள்ள முக்கியத்துவத்தை சேகரிப்பாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். பழைய காலத்து அரிய நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் கேம்களை வாங்குவதில் அவர்களிடையே ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT