சியோல்
தென்கொரியாவில் போக்குவரத்து சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து பஸ் மோதியதில் 57 பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்கொரிய தலைநகர் சியோலுக்கு தெற்கே பன்டாங் மாவட்டத்தில் சியோங்னாம் நகரில் இன்று காலை போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது, அந்த வழியே பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி, விபத்தில் சிக்கியது.
அந்த பஸ் சிக்னலில் நின்று கொண்டிருந்த 32 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அவற்றில் 27 கார்களும், 4 பஸ்களும் அடங்கும். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். இதன் பின்னர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி பஸ் நின்றது.
இந்த விபத்தில் 9 பேருக்கு படுகாயமும், 48 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. மொத்தம் 57 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பிரேக்குகள் சரிவர செயல்படாமல் போய் விட்டது என அவர் கூறினார்.