தெஹ்ரான்
ஹார்மூஸ் ஜலசந்தியில் 24 மணிநேரத்தில் 7 கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்து உள்ளன என ஈரான் கடற்படை தெரிவித்து உள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் இருதரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
எனினும், ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை யார் நிர்வகிப்பது? என்பதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இரு தரப்பினரும் இந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
எங்களுடைய அனுமதியின்றி கப்பல்கள் செல்ல முடியாது என ஈரான் அறிவித்தது. ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்போ இந்த பகுதியை முழு அளவில் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என கூறினார்.
இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை வெளியிட்ட செய்தியில், ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் ஹார்மூஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் செல்ல முயன்றன. எங்களுடைய ரேடார் மற்றும் பிற சாதனங்களை மீறி அவை சென்றன.
இந்த அங்கீகாரம் இல்லாத பகுதி வழியே யாருக்கும் தெரியாமல் ரகசிய பயணம் மேற்கொண்டு செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்கள் வழியிலேயே, கடல் கண்ணி வெடியில் சிக்கி, வெடித்து, தீப்பிடித்து எரிந்தன என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, கப்பல் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ஈரான் கடற்படை எச்சரிக்கை ஒன்றையும் விடுத்தது. எங்களுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படாமல், நீர்வழியில் செல்ல முயற்சிக்க வேண்டாம்.
நாங்கள் ஏற்பாடு செய்த பகுதியின் வழியே கப்பல்கள் செல்லவும் என எச்சரித்தது. அதனால், இதுபோன்ற தடை செய்யப்பட்ட, ஜலசந்தியின் கிழக்கு கடல்சார் மண்டலத்தில் கப்பல்கள் போக வேண்டாம் என்றும் அப்படி மீறி சென்றால் அந்த கப்பல்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்றும் கடற்படை எச்சரித்தது.
2 கப்பல்கள் வெடித்து சிதறிய தகவல் அறிந்ததும், அந்த வழியே ரகசிய முறையில் செல்ல முயன்ற வேறு 2 கப்பல்களுக்கு ஈரான் கடற்படையின் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்ததும், அந்த 2 கப்பல்களும் பாரசீக வளைகுடாவுக்கு திரும்பின என ஈரான் இன்று தெரிவித்துள்ளது.
இதனால், கடந்த 24 மணிநேரத்தில் 7 கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன என ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.