உலக செய்திகள்

கத்தாரில் மட்டும் 8 ஆயிரம்... வளைகுடா நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவிப்பு

ஹமத் சர்வதேச விமான நிலையம் மீது நடக்க இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என கத்தார் கூறியுள்ளது.

கத்தார்

மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை ஈரானின் அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. பல்வேறு நாடுகளும் தங்களுடைய குடிமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி வருகிறது. இந்தநிலையில், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு விட்டன.

இதுபற்றி, கத்தாரின் வெளியுறவு அமைச்சம் இன்று வெளியிட்ட செய்தியில், கத்தாரில் மட்டும் 8 ஆயிரம் பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர் என தெரிவித்து உள்ளது. மத்திய கிழக்கின் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி உள்ளனர்.

எனினும், ஹமத் சர்வதேச விமான நிலையம் மீது நடக்க இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேலின் பிற தளங்கள் மீது நடக்க இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது என கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வரவுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள போதிய இடைமறிப்பு ஏவுகணைகள் எங்கள் வசம் உள்ளன என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.