97 வயது பாட்டி 
உலக செய்திகள்

விமான இறக்கை மீது நின்றபடி 97 வயது பாட்டி கின்னஸ் சாதனை

தனது 93-வது வயதில் இதே போன்ற சாகசத்தை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.

லண்டன்,

வயது என்பது வெறும் எண்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், பிரிட்டனைச் சேர்ந்த 97 வயது மூதாட்டி ஒருவர் விமான இறக்கை மீது நின்றபடி ஆபத்தான வான் சாகசம் புரிந்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

விமான இறக்கையில் சாகசம்

பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியை சேர்ந்தவர் பெட்டி ப்ரோமேஜ் (வயது 97). இவர் நடுவானில் பறக்கும் விமானத்தின் மேல் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ஆசனத்தில் தன்னை இணைத்து கொண்டு சாகசப் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட ஏரோ-சூப்பர்பேடிக்ஸ் இருதள விமானத்தின் இறக்கையின் மீது நின்றபடி இவர் வான் சாகசத்தில் ஈடுபட்டார்.

மணிக்கு 150 மைல் வேகத்தில், வானில் வளைந்து நெளிந்து பறந்த அந்த விமானத்தில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ஆபத்தான முறையில் பயணித்து மூதாட்டி சாதனை படைத்தார்.

சொந்த சாதனையை முறியடித்தார்

இதன் மூலம், "உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை" என்ற பெருமையை பெற்று, புதிய கின்னஸ் உலக சாதனையை இவர் தன்வசமாக்கியுள்ளார். முன்னதாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது 93-வது வயதில் இதே போன்ற சாகசத்தை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். தற்போது தனது 97-வது வயதில் மீண்டும் காற்றில் பறந்து, தன் சொந்த சாதனையையே அவரே முறியடித்துள்ளார்.

பக்கவாத நோய் பாதிப்பு

மூதாட்டி பெட்டி ப்ரோமேஜ், கடந்த 2025-ஆம் ஆண்டு திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். இதனால் அவரது பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கம் சற்று பாதிக்கப்பட்டது. எனினும், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர், தனது உடல்நல பாதிப்பை பொருட்படுத்தாமல் இந்த சாகச முயற்சியை மேற்கொண்டு வென்று காட்டியுள்ளார்.

நிதி உதவி செய்ய முயற்சி

இதுகுறித்து மூதாட்டி பெட்டி ப்ரோமேஜ் கூறுகையில்,"வயதாகிவிட்டால் சும்மா இருக்க எனக்குப் பிடிக்காது, வாழ்க்கை சலித்துவிடும். என்னால் இப்போது கார் ஓட்ட முடியாது, பார்வையும் மங்கலாக உள்ளது. எனவே, என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய விரும்புகிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை வானில் பறப்பேன்"என்று உத்வேகத்துடன் தெரிவித்தார்.

6 முறை சாகசம்

தனது 87-வது வயதில் முதன்முதலாக இந்த வான் சாகசத்தை தொடங்கிய இவர், இதுவரை 6 முறை விமான இறக்கையில் பயணித்துள்ளார். மேலும், தனக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதியுதவி திரட்டுவதற்காகவே இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டதாக நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.